பேரன்பு திரை விமர்சனம்

ராமின் “பேரன்பு”

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுப் பிறந்த (Cerebral Palsy affected) பாப்பாவை (‘தங்க மீன்கள்’ சாதனா) புரிந்துகொள்ளவும், அவளது தேவைகளைப் பூர்த்தி செய்யவும் போராடும் பாசமிகு தந்தையின் கதை.

“பாப்பாவைப் போல பிறவிகளைப் பார்க்கும் போதுதான், வாழ்க்கைல நாமெல்லாம் எவ்ளோ ஆசிர்வதிக்கப்பட்டவங்க என்பது புரியும்” என்கிற தொடக்க காட்சி வசனத்திலேயே பொறி பிறக்கிறது ! போகப் போக அந்தப் பொறி பெருநெருப்பாகி, வேள்வித் தீ வளர்க்கிறார் இயக்குநர் ராம் !

‘இயற்கை துயரமானது’ ‘இயற்கை ஆறுதலானது’ ‘இயற்கை விதிகளற்றது’ என்பது போல மாறி மாறிப் பயணிக்கும் மிக வித்யாச திரைக்கதை, ‘இயற்கை பேரன்பானது’ என்ற அத்தியாயத்துடன் முடியும் வரை தவிப்புக்குள்ளான நம் சுவாசம், ஆசுவாசம் கொள்கிறது.

வசனங்களும் கூர்மை. “கொஞ்சம் நேரம் என் பாப்பாவைப் போல இருக்க முயற்சி பண்ணாலே என்னால முடியலையே… ” நீ ஏன் அடுத்தவனைப் போல இல்ல?” ன்னு ஒரு மனுஷனைப் பார்த்துக் கேட்கிறது எவ்ளோ பெரிய வன்முறை !” எவராலும் மறுக்கவே முடியாத எதார்த்தம் இது.

தமிழகம் தாண்டி பிற நாடுகளில் இப்படம் திரையிடப்பட்ட போது, அந்த ‘பாப்பா’ நிஜமான Spastic Child’ என்றே அத் தேசத்தவர் எண்ணியிருக்கலாம் ! பதினைந்து வயதில் இவ்வளவு தத்ரூபமாக நடிக்க ‘தங்க மீன்கள்’ சாதனாவைத் தவிர வேறு யாராலும் இயலாது.
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி நூறு விழுக்காடு கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் ! ஒரு ஹீரோ எப்படி கதாபாத்திரத் தேவைக்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கோர் எடுத்துக்காட்டு மம்முட்டி.

புதிரான கேரக்டராக வந்து போகும் விஜி (அஞ்சலி) பனி போலும், தீ போலும் பரிணமிக்கிறார். திருநங்கை மீரா (அஞ்சலி அமீர்) ஒரு கோடை மழை ☔

தமிழ் சினிமா வரலாறு இதுவரை காணாத Climax !!

சர்வதேசத் திரைப்பட விழாக்கள் அங்கீகரித்த இந்தப் படத்தை நாம் கொண்டாடத் தவறினால்… கடைசி வரைக்கும் மசாலா படங்களில் நிதர்சனமும், சுயமும் தொலைத்தவர்கள் ஆவோம்.

#பேரன்பு_பெருந்தவம்

வித்தக சேகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *