உணவு பாதுகாப்புத் துறைக்கு கைபேசி செயலி துவக்கம், விரைவில் தனி வலைதளம் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்…

 

உணவு பாதுகாப்புத் துறைக்கு கைபேசி செயலி துவக்கம், விரைவில் தனி வலைதளம் – அமைச்சர் டாக்டர் .சி.விஜயபாஸ்கர் தகவல்…

உணவு பாதுகாப்புத்துறைக்கு விரைவில் தனி வலைதளம் மற்றும் கைபேசி செயலி தொடங்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை சேத்துப்பட்டு யூனியன் கிறிஸ்டியன் பள்ளியில் நடைபெற்ற உலக உணவு பாதுகாப்பு தினத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பாரம்பரிய உணவு கண்காட்சி, நடமாடும் உணவு ஆய்வகத்தை பார்வையிட்டு, உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு காட்சி பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு, உலக உணவு பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்று, செல்பி பூத்தில் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

உலகளவில் நடைபெறும் முதல் உணவு பாதுகாப்பு தினம் 07.06.2019 முதல் இரு வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் 6 இடங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சேத்துப்பட்டு யூனியன் கிறிஸ்டியன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் விழிப்புணவுடன் இருப்பதற்காக உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு காட்சி பதாகை மற்றும் துண்டு பிரசுரங்களில் ஐந்து தூண்கள் இடம் பெற்றுள்ளன.

1. உணவை கையாளும் போது தன் சுத்தத்தை பராமரிக்கவும்
2. சமையலறையையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கவும்,
3. பாதுகாப்பான உணவிற்கான அனைத்து வழிகளையும் பின்பற்றவும்
4. உணவை உட்கொள்ளுமுன் அது கலப்படமில்லாமலும், கெட்டுபோகாமலும் இருப்பதை உறுதி செய்யவும்
5. நீங்கள் உண்ணும் உணவைப் பற்றிய தகவல்களை விபரச்சீட்டிலிருந்து அறிந்து கொள்ளவும்.

29.01.2019 அன்று புதுடெல்லியில் இந்திய அளவில் நடைபெற்ற ஆரோக்கிய பாரத பயண (சுவஸ்த் பாரத் யாத்ரா) நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருதும், மதுரை மற்றும் சிவகாசி மாவட்டங்களுக்கு சிறந்த மாவட்டத்திற்கான விருதும் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையானது, இந்திய தரநிர்ணய ஆணையம், பங்குதாரர்கள், உணவு வணிகர்கள் மற்றும் பல்வேறு துறையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஆரோக்கியமான உணவு, பாதுகாப்பான உணவு, மற்றும் செறிவூட்டப்பட்ட உணவு என்ற செய்திகளை மக்களுக்கு சென்றடையச் செய்ததற்காக சிறந்த மாநிலத்திற்கான விருதினை பெற்றுள்ளது.

ஒவ்வொரு மாணவருக்கும் பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டம் தமிழ்நாட்டில் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளில் 1,347 பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ளன. இதுவரை 3,392 ஆசிரியர்கள் பயிற்சியின் மூலம் கற்ற தகவல்கள் 48,162 மாணவர்களுக்கு கலந்துரையாடல் முறையின் மூலம் கற்பிக்கப்பட்டுள்ளது. உணவில் உள்ள கலப்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட 2,970 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,186 ஆசிரியர்களுக்கு இச்சோதனை குறித்து பயிற்றுவிக்கப்பட்டு அவர்கள் மூலம் இதுவரை 3.53 லட்சம் பள்ளி மாணாக்கர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 130 சுற்றுலா தலங்களில் உணவுப் பாதுகாப்பு தகவல் தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டு இதன் மூலமாக சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு பொருட்களை வழங்கிட உணவு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1.40 லட்சம் சுற்றுலா பயணிகள் பயனடைந்துள்ளனர்.

தேவைக்கு அதிகமாக உணவு இருக்கும் பட்சத்தில், அதனை வீணாக்காமல் அதனைப் பெற்று, யாருக்கு உணவு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு பயன்படும் வகையில் நோ புட் வேஸ்ட் தன்னார்வ தொண்டு நிறுவனம் பகிர்ந்தளிக் கிறார்கள். சென்னையில் நான்கு நோ புட் வேஸ்ட் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதர மாநகராட்சிகளில் தலா 1 வாகனம் வீதம் விரைவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

01.05.2017 முதல் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கும், நுகர்வோர்களுக்கும் உணவு தரம் குறித்து வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தெரிவிக்க 9444042322 என்ற கைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் புகார்கள் பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 8750 புகார்கள் வரப்பெற்று அனைத்து புகார்களுக்கும் தீர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.20 லட்சம் மதிப்பில் உணவு பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட, புகார் மற்றும் குறைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உணவு பாதுகாப்புத் துறைக்கென தனி வலைதளம் மற்றும் கைபேசி செயலி விரைவில் உருவாக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், உணவு பாதுகாப்புத் துறை கூடுதல் ஆணையர் வனஜா, சென்னை ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ரவி, யூனியன் கிறிஸ்டியன் பள்ளி செயலாளர் வினோத் சைமன், முதல்வர் சுந்தரத்தாய் லஸாராஸ், சென்னை மாவட்ட பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *