சுகாதாரத்துறையில் 108 அறிவிப்புகள்: சட்டசபையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியி்ட்டார்

மருத்துவத்துறை வளர்ச்சிக்காகவும் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் வகையிலும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் 108 அறிவிப்புகளை வெளியிட்டு உறுப்பினர்களின் வரவேற்பை பெற்றார்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் 108 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விபரம் வருமாறு:–

* சென்னையில் உள்ள மன நல காப்பகத்தில் மன நல சிகிச்சை தரம் உயர்த்துவதற்காக ஒரு ஒப்புயர்வு மையம் 25.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

* தமிழ்நாடு அவசர கால ஊர்தி சேவை திட்டத்திற்கு கூடுதலாக 121 அவசர சிகிச்சை ஊர்திகள் 26.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* சுகாதாரத் துறையின் புதிய முயற்சியாக ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை ஒரு மருத்துவமனையிலிருந்து வேறு உயர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்காக 120 சிறப்பு வாகனங்கள் 19.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* மதுரை மாநகரில் மத்திய அரசுடன் இணைந்து, 20 கோடி ரூபாய் செலவில், உலகத் தரம் வாய்ந்த, ஆண்டிற்கு 5000 மருந்து மாதிரிகளை பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்ட மேலும் ஒரு மருந்துகள் ஆய்வுக்கூடம் நிறுவப்படும்.

* தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சேவைத் திட்டத்தினை மேலும் வலுப்படுத்த, அரசு மருத்துவமனைகளிலேயே முதன் முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஒரு நடமாடும் சி.டி. ஸ்கேன் கருவி 7 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

* கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி நிறுவப்படும்.

* சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 128 கூறு (Slice) சி.டி ஸ்கேன் கருவி வழங்கப்படும்.

25 அரசு மருத்துவமனைகளில் விபத்து சேவை ஆய்வு கூடம்

* தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சேவை திட்டத்தின் கீழ், 23 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை ஆகிய 25 மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை மையங்களில் துரித ஆய்வுக் கூடம் அமைப்பதற்கு, தேவையான கருவிகள் மற்றும் இதர வசதிகள் 2.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

* சென்னை எழும்பூர் மகளிர் மருத்துவமனைக்கு புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்த 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சி.டி. சிமுலேட்டர் கருவி வழங்கப்படும். மேலும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு 1 கோடி ரூபாய் செலவில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி வழங்கப்படும்.

ரூ.21 கோடியில் ஜெனரேட்டர், இன்வெர்ட்டர்

* தமிழகத்தில் முதன் முறையாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் எக்மோ சிகிச்சை வசதி 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

* அனைத்து மாவட்டம், வட்டம் மற்றும் வட்டம் சாரா அரசு மருத்துவமனைகளுக்கு தங்கு தடையில்லா மின்சாரம் வழங்க தேவைக்கேற்ப ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் கருவிகள் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* அரசு பள்ளிகளில் செயல்படும் பெற்றோர்-ஆசிரியர் கழகம் போலவே அரசு மருத்துவமனைகளிலும், ‘மருத்துவமனை மேம்பாட்டுக் குழு’ அமைக்கப்படும். மருத்துவமனைக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே நல்லுறவை உருவாக்கி மக்கள் நல்வாழ்வுத் துறையின் திட்டங்கள் மக்களிடையே முழுமையாக சென்றடையவும், நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்து விரைவில் தீர்வு காணவும், மருத்துவமனையின் மேம்பாடு குறித்த ஆலோசனைகளைப் பெறவும் இக்குழு ஒரு இணைப்பு பாலமாக செயல்படும்.

* அரசு மருத்துவமனைகளை அங்கு பணிபுரியும் அலுவலர்கள் வளாகங்களை சுத்தமாகவும், பசுமையாகவும் பேணிக் காப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு, சிறப்பாக பராமரிக்கப்படும் அரசு மருத்துவமனைகளுக்கு தூய்மை மற்றும் பசுமை விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

மருத்துவமனை தினம் அனுசரிப்பு

* அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் மருத்துவமனையின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் சிறப்புகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாள் ‘மருத்துவமனை தினமாக’ அனுசரிக்கப்படும்.

* மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அச்சமின்றி பணியாற்றி மக்களுக்கு முழுமையாக தமது சேவைகளை அளிக்கும் வகையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடு, அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், காவல் துறையின் உதவியை காலதாமதமின்றி பெற்றிட, உடனடி உதவி தொலைபேசி இணைப்பு அமைக்கப்படும்.

குறை தீர்ப்பு ஆலோசனை பெட்டிகள்

* அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளர்கள் தொடர்பான குறைகளை நேரடியாக தெரிவித்து உடனுக்குடன் சரி செய்யும் வகையில், தினந்தோறும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை, அந்தந்த மருத்துவனையின் பொறுப்பு மருத்துவ அலுவலர்களை சந்திக்க, பிரத்தியேக ஏற்பாடு செய்யப்படும். இதுமட்டுமன்றி, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குறை தீர்ப்பு ஆலோசனை பெட்டிகள் வைக்கப்படுவதோடு, 24 மணி நேர 104 உதவி மையத்திற்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் நோயாளிகள் தம் குறைகளை தெரிவித்து, தீர்வு பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

* சென்னை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் குழந்தைகள் பராமரிப்பு மையம் அங்கு பணிபுரியும் பெற்றோரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள பிற மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

* அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 200 டயாலிசிஸ் கருவிகள் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* கன்னியாகுமரி, ஐ.ஆர்.ட்டி பெருந்துறை, கோயம்புத்தூர் மற்றும் தருமபுரி ஆகிய 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், செய்யாறு, கள்ளக்குறிச்சி, காரைக்குடி, பொள்ளாச்சி, பெரம்பலூர், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் மற்றும் ஓசூர் அரசு வட்ட மருத்துவமனையிலும் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11 தாய் சேய் நல மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த 11 தாய் சேய் நல மையங்களுக்கும் 14.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனக் கருவிகள் வழங்கப்படும்.

கூடுதல் சி.டி.ஸ்கேன் கருவிகள்

* அரசு மருத்துவமனைகளில் சி.டி ஸ்கேன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விபத்து மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைகளை விரைந்து வழங்கும் பொருட்டு அதிக எண்ணிக்கையில் ஸ்கேன்கள் நடைபெறும் செங்கல்பட்டு, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக சி.டி ஸ்கேன் கருவிகள் வழங்கப்படும்.

* வளரிளம் பெண்களிடையே இரத்த சோகையை தடுப்பதற்காக, நெல்லிக்காய் பொடி, கறிவேப்பிலைப் பொடி, முருங்கைக் கீரைப் பொடி மற்றும் தேன் அடங்கிய அம்மா இயற்கை நலப் பெட்டகம் 1.75 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

* குணமடைந்த மன நோயாளிகளுக்கு வீட்டு சூழல் புனர்வாழ்வு வசதிகளை வழங்கும் பொருட்டு தொண்டு நிறுவனங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் ‘மீண்டும் இனிய இல்லம்’ என்ற திட்டம் 1.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

பச்சிளம் குழந்தை வளர்ப்புக்கு ஆலோசனை உதவி மையம்

* தமிழகத்தில் புதிய முயற்சியாக பச்சிளம் குழந்தை வளர்ப்பு பற்றி தாய்மார்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக சென்னையில் கட்டணமில்லா ஒருங்கிணைந்த ஆலோசனை உதவி மையம் 1.31 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

* ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மேலசிறுபோது, மேலகிடாரம், நரிப்பையூர், உச்சிநத்தம், ஆப்பனூர், வாலிநோக்கம், சிக்கல், பெருநாழி, கீழத்தூவல், திருவரங்கம், தேரிருவேலி, பாம்பூர், வெங்கிட்டான்குறிச்சி, பார்த்திபனூர், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குளிக்கரை, ஆதிச்சபுரம், சித்தமல்லி, களப்பால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முடுக்கன்குளம் ஆகிய 19 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவு கட்டடங்கள் 13.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

* உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை முறையை மேம்படுத்துவதற்காக 47 வட்டாரங்களில் நோயாளிகள் ஆதரவுக் குழு ஏற்படுத்தப்படும். இக்குழு நோயாளிகளை பரிசோதித்து உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை வழங்கும்.

* நாற்பத்தி ஒன்பது இந்தியமுறை மருத்துவப் பிரிவுகளுக்கு 12.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள், கருவிகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படும்.

நோய் வருமுன் தடுக்க

நலவாழ்வு மையங்கள் * நோய்களை வருமுன் தடுக்கும் பொருட்டு 100 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபயிற்சி பகுதி, யோகா பயிற்சி பகுதி, உடற்பயிற்சி மற்றும் அக்குபிரஷர் வசதிகளுடன் கூடிய நலவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

* சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள செனாய் நகர் மற்றும் புளியந்தோப்பு சமுதாய சுகாதார மையங்களில் முறையே 8.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு நிலையமும், 1.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடமும் கட்டித்தரப்படும்.

* தமிழகத்தில், 9.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காசநோய் தாக்கம் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

* உணவு மற்றும் உணவுப் பொருட்களின் தரத்தை கண்டறிய விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கூடுதலாக புதிய மூன்று உணவுப் பகுப்பாய்வுக் கூடங்கள் 9 கோடி ரூபாய் மதிப்பிட்டில் அமைக்கப்படும்.

ரத்த சோகை இல்லா தமிழகத்தை உருவாக்க…

* ரத்த சோகை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் பொருட்டு 65 லட்சம் மகளிருக்கு 8.7 கோடி ரூபாய் செலவில் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலச்சத்து மாத்திரைகளும், குடற்புழு நீக்க மாத்திரைகளும் வழங்கப்படும்.

* மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 8.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மருத்துவ கருவிகளுடன் அவசர சிகிச்சை துறை வலுப்படுத்தப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு ரத்த வங்கிகளுக்கும் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன தானியங்கி கருவிகள் மற்றும் நுகர்பொருட்கள் வழங்கப்படும்.

* சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 102 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 7.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இ.சி.ஜி, செமி -ஆட்டோ அனலைசர், செல் கவுன்ட்டர் போன்ற கருவிகள் வழங்கப்படும்.

* சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியில் 7.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாணவர்களுக்கு கூடுதல் விடுதிக் கட்டடம் கட்டப்படும்.

* காசநோயை கண்டறியும் நவீன பரிசோதனை வசதிகள் 17.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 385 வரையறுக்கப்பட்ட நுண்ணோக்கி மையங்களில் ஏற்படுத்தப்படும்.

* பவானி, ராசிபுரம், குமாரபாளையம், பாபநாசம், கோலார்பட்டி, தொண்டாமுத்தூர். போடிநாயக்கனூர் ஆரணி அரசு மருத்துவமனைகளுக்கும், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும் 13.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும்.

* குழந்தை பிறந்தவுடன் காது கேளாமையை கண்டறிய 34 ஆரம்ப நிலை இடையீட்டு மையங்களுக்கு 5.4 கோடி ரூபாய் செலவில் 34 ஆட்டோ அகொஸ்டிக் எமிஷன் கருவிகளும், 34 செவித் திறன் கண்டறியும் ஆடியோமெட்ரிக் கருவிகளும் வழங்கப்படும்.

சீமாங்க் பிரிவுகள்

* செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தேனி விழுப்புரம் ஆகிய 4 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சீமாங்க் பிரிவுகளுக்கும், நீலகிரி, திண்டுக்கல், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை ஆகிய 5 மருத்துவமனைகளில் உள்ள தாய் சேய் நல பிரிவுகளுக்கும் கூடுதலாக 51 மகப்பேறு மருத்துவர்கள், 16 மயக்கவியல் மருத்துவர்கள், 12 குழந்தை நல மருத்துவர்கள், 180 செவிலியர்கள் மற்றும் 54 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களும் 5.02 கோடி ரூபாய் செலவில் பணியமர்த்தப்படுவார்கள்.

* அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், செந்துரை மற்றும் திருமானூர் வட்டாரங்கள், ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டாரம், விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் மற்றும் கள்ளக்குறிச்சி வட்டாரங்கள், இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, மண்டபம் மற்றும் திருப்புல்லானி வட்டாரங்கள் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டாரம், திருவாரூர் மாவட்டம், கொரடச்சேரி மற்றும் கோட்டூர் வட்டாரங்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டாரம் ஆகிய 13 வட்டாரங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துணை செவிலியர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 24 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.

* கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காசநோய் பாதிப்புக்கு உள்ளாகும் அபாய நிலையில் உள்ளோரை கண்டறியும் பணி 4.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* தமிழகத்தில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய் தடுப்பூசித் திட்டமும், மூளை காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைத் திட்டமும் 6.43 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை

* 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான 14 அவசர சிகிச்சை ஊர்திகள் 4.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, தருமபுரி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள எலும்பியல் பிரிவுகளுக்கு 20 சி-ஆர்ம் எலும்பு மூட்டு அறுவை சிசிக்சை கருவிகள் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநாழி, திருவரங்கம், தேரிருவேலி, பாம்பூர், வெங்கிட்டான்குறிச்சி, புதுமடம், வேலனூர், ரெகுநாதபுரம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குளிக்கரை, கண்கொடுத்தவனிதம், களப்பால் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம், மலைக்கொத்தலம் ஆகிய 13 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு பிரிவு கட்டடங்கள் 3.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

* 3.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பென்னாகரம், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் குளித்தலை அரசு மருத்துவமனையிலும் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

* மதுரை அரசு மருந்தாக்கியல் கல்லூரிக்கு 2.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்படும்.

செவிலியர்கள், பணியாளர்கள் நியமனம்

* தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சேவைத் திட்டத்தின் கீழ் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை, சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஈரோடு ஐ,ஆர். டி. பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய 9 மருத்துவக் கல்லூரி மருத்துமனைகள், சென்னை ஒமந்தூரர் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கோயம்புத்தூர் மாவட்டம்-பொள்ளாச்சி, தருமபுரி மாவட்டம்-பென்னாகரம், விழுப்புரம் மாவட்டம் – கள்ளக்குறிச்சி, கரூர் மாவட்டம்-குளித்தலை, மதுரை மாவட்டம்-உசிலம்பட்டி, நீலகிரி மாவட்டம்-உதகமண்டலம், சேலம் மாவட்டம்-மேட்டூர் அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், தேனி மாவட்டம் பெரியகுளம், திருவண்ணாமலை மாவட்டம்-செய்யாறு, திருவாரூர் மாவட்டம்-மன்னார்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்-மணப்பாறை, திருப்பூர், இராமநாதபுரம், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், ஈரோடு, மற்றும் விருதுநகர் ஆகிய 19 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரியலூர் மாவட்டம்-ஜெயம்கொண்டம், தருமபுரி மாவட்டம்-அரூர், திண்டுக்கல் மாவட்டம்-கொடைக்கானல் மற்றும் பழனி, நாகப்பட்டினம் மாவட்டம்-மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டம்-விராலிமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்-துறையூர், திருவள்ளூர் மாவட்டம்-திருத்தணி, விருதுநகர் மாவட்டம்-அருப்புக்கோட்டை, சிவகாசி மற்றும் ராஜபாளையம் ஆகிய 11 அரசு வட்ட மருத்துவமனைகள் என 40 அரசு மருத்துவ நிலையங்களில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு 128 செவிலியர்கள், 68 அறுவை சிகிச்சை உதவியாளர்கள், 68 நுண்கதிர் படப்பிடிப்பாளர்கள் மற்றும் 272 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் 2.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியமர்த்தப்படுவார்கள்.

* 2.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 385 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதியோர்களுக்கான இயன்முறை சேவை, மருத்துவக் கருவிகள் மற்றும் உரிய பயிற்சி அளிக்கப்படும்.

* சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கோயம்புத்தூர், தருமபுரி, செங்கல்பட்டு, சேலம், சிவகங்கை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மற்றும் பெருந்துரை ஐ.ஆர்.டி ஆகிய 16 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வலி மற்றும் நோய் தணிப்பு சிகிச்சை மையங்கள் 2.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

* 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மன நல காப்பகத்தில் புனர்வாழ்வு மையம் அமைக்கப்படும்.

கர்ப்பகால நீரிழிவு நோய்க்கு சிகிச்சை

* தாய்மார்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு நோயை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு திட்டம் 2.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வலுபடுத்தப்படும்.

* மலைப் பிரதேசங்களில் உள்ள வால்பாறை மற்றும் கொடைக்கானல் அரசு மருத்துவமனைகள் மற்றும் உதகமண்டலம் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவற்றில் பிராணவாயு உற்பத்தி செய்யும் கருவி 2.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* திருவாரூர் மாவட்டம், அத்திக்கடை, சித்தமல்லி, திருமக்கோட்டை, பெரும்பனையூர், களப்பால், குளிக்கரை, ஆதிச்சபுரம், மற்றும் இராமநாதபுரம் மாவட்டம், பாம்பூர், பார்த்திபனூர், வெங்கிட்டான்குறிச்சி மற்றும் புதுக்கோட்டை மாட்டம், மீமிசல் ஆகிய 11 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் 2.55 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஈரோடு மாவட்டம் சூசைபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலருக்கான குடியிருப்பு கட்டடம் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படும்.

* அரசு மருத்துவமனைகளுக்கு ஹெப்படைடிஸ் (மஞ்சள் காமாலை) பி மற்றும் சி வைரஸை கண்டறியும் ஆய்வக கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான மருந்துகள் 2 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

* ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் மற்றும் திருவாரூர் மாவட்டம் ஆதிச்சாபுரம் ஆகிய இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்மை துணை செவிலியர்களுக்கு ஊரக சுகாதார பயிற்சி நிலையங்கள் 2 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

பகுப்பாய்வு கூடத்திற்கு ரூ.2 கோடியில் அதிநவீன கருவிகள்

* மருந்துப் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாக வழங்க ஏதுவாக மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் சென்னையில் இயங்கி வரும் மருந்துகள் பகுப்பாய்வுக் கூடத்திற்கு, உலகத் தரம் வாய்ந்த அதிநவீன கருவிகள் 2 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

* யோகா மற்றும் இயற்கை முறை சிகிச்சைக்காக சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை முறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 25 படுக்கைகள் கொண்ட கட்டணப் பிரிவு 2 கோடி ரூபாய் டாம்ப்கால் தொகுப்பு நிதியில் செயல்படுத்தப்படும்.

* தமிழகத்தில் 10 மாநகராட்சிகளில் 2324 மகளிர் நலவாழ்வு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளில் சமுதாய ஈடுபாட்டினை மேம்படுத்துவதற்கான பயிற்சியினை அளித்து, அப்பணிகளை செயல்படுத்த 1.86 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

* அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசுக்களுக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளை கர்ப்ப காலத்தில் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்வதற்கு 1.7 கோடி ரூபாய் செலவில் வசதிகள் செய்யப்படும்.

* திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 150 இருக்கைகள் கொண்ட புதிய தேர்வுக் கூடம் 1.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

வீட்டிற்கே சென்று நோய் கண்டறியும் சிகிச்சை

* 1.52 கோடி ரூபாய் செலவில் திண்டுக்கல், ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி, திருப்பூர், தூத்துக்குடி மாநகராட்சிகள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் மக்களின் நோய்களை கண்டறியும் பொருட்டு அவர்களின் வீட்டிற்கே சென்று உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய், காசநோய், தொழுநோய் ஆகியவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

* தேர்ந்தெடுக்கப்பட்ட 100 துணை சுகாதார நிலையங்களில் தானியங்கி ஆய்வக வசதிகள் 1.5 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

* அரியலூர், கடலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், இராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் விருதுநகர் ஆகிய 9 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் நுரையீரல் நோய்களுக்கான மருத்துவ திட்டத்தினை வலுப்படுத்த 1.35 கோடி ரூபாய் செலவில் மருந்துகள் மற்றும் ஸ்பைரோமெட்ரி, பைபேப் வெண்டிலேட்டர்), ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர் ஆகிய கருவிகள் வழங்கப்படும்.

* 1.26 கோடி ரூபாய் செலவில் குறை மாத பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் விழித்திரை குறைபாட்டினை தடுப்பதற்காக முன்கூட்டியே விழித்திரையை பரிசோதிக்கும் ரெட்கேம் கருவி சேலம், மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் கடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலுள்ள பச்சிளம் குழந்தை மையங்களுக்கு வழங்கப்படும்.

* ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதலாக செமி-ஆட்டோ அனலைசர், ஸ்கேன், மல்டி பாரா மானிட்டர் மற்றும் மருத்துவ கருவிகள் 1.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

கல்வி நிறுவனங்களில் ஆராக்கியமான உணவு

* தேசிய பரவு நோயியல் நிறுவனம் 1 கோடி ரூபாய் செலவில் தேசிய புற்றுநோய், நீரிழிவு, இரத்த நாள நோய்கள் மற்றும் பக்கவாத நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு தொழில்நுட்ப உதவி வழங்குவதுடன் மதிப்பாய்வும் மேற்கொள்ளும்.

* சென்னை எழும்பூர் சிறார் நல நிலையம் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் சென்னை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகிய இடங்களில் தசை இறுக்க வியாதியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு தண்டுவட உறை பேக்ளோஃபன் குழாய் கருவி பொருத்தும் வசதிகள் 1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

* அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஆரோக்கியமான உணவு வளாகமாக மாற்றும் பொருட்டு 500 தொழில்நுட்ப கல்லூரிகள், 1350 கல்லூரிகள் மற்றும் பள்ளிகள், 54,439 அங்கன்வாடி மையங்களில் ஆரோக்கியமான உணவு / பாதுகாப்பான உணவு / செறிவூட்டப்பட்ட உணவு முறைகள் குறித்து ‘ஈட் ரைட்’ திட்டத்தின் கீழ் 90 லட்சம் ரூபாய் செலவில் விழிப்புணர்வும் தேவையான பயிற்சியும் வழங்கப்படும்.

* புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோளினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வர இயலாத நோயாளிகளுக்கு, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவ சேவை அளிக்கும் திட்டம் 287 வட்டாரங்களில் 86 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும்.

ஆசிரியர்களுக்கு பயிற்றுனர் பயிற்சி

* 82 லட்சம் ரூபாய் செலவில் இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களில், பள்ளி குழந்தைகளுக்கு சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஆசிரியர்களுக்கு பயிற்றுனர் பயிற்சி அளிக்கப்படும்.

* தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சேவைத் திட்டத்தினை வலுப்படுத்த, சேலம், செங்கல்பட்டு, விழுப்புரம், தருமபுரி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தைகள் அவசர சிகிச்சை மற்றும் நலப்படுத்துதல் பிரிவுகளுக்கு 78 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கருவிகளும், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருவாரூர், கரூர், தேனி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகிய 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 96 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடமாடும் செயற்கை சுவாசக் கருவிகளும் வழங்கப்படும்.

* மருந்துகளை இருப்பு வைத்து சரிபார்க்கும் பார் கோடிங் முறை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தால் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

* பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள வளசரவாக்கம், பெருங்குடி, திருவெற்றியூர் மற்றும் புழல் ஆகிய 4 நகர்புற சமுதாய சுகாதார மையங்களில் 61 லட்சம் ரூபாய் செலவில் மகப்பேறு மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் கூடுதலாக பணியமர்த்தப்படுவார்கள்.

* அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை மற்றும் பாளையங்கோட்டை, அரசு யோகா மற்றும் இயற்கை முறை மருத்துவக் கல்லூரி, சென்னை, அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, சென்னை, அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி, கோட்டார், நாகர்கோவில் மற்றும் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் ஆகிய 6 அரசு இந்தியமுறை மருத்துவக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

* முதியோர்களிடையே காணப்படும் மறதி நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க, ஏற்கனவே செயல்படும் 10 அவசர மீட்பு பராமரிப்பு மையங்களில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பகல் நேர பராமரிப்பு மையம் ஏற்படுத்தப்படும்.

3–ம் பாலினத்தவர்களுக்கு பன்னோக்கு சிகிச்சை

* திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு சிகிச்சை சிறப்புப் பிரிவு 60 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

* கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எலும்பு மூட்டு நுண்துளை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

* கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 4 சிறப்பு பிரிவுகளில் 8 டி.என்.பி முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்பு இடங்கள் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

* தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்கு 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவக் கருவிகள் வழங்கப்படும்.

* மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 64 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் தொழில்சார் சுகாதார சேவைகள் வழங்கப்படும்.

* இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அரசு மருத்துவமனையிலும், சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையிலும் 1.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரேத பரிசோதனைக் கூடங்கள் நிறுவப்படும்.

* மணப்பாறை, காரைக்குடி, உசிலம்பட்டி மற்றும் மேட்டூர்-அணை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகயிலும் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தாய்ப்பால் வங்கிகள் ஏற்படுத்தப்படும்.

* பச்சிளம் குழந்தைகளிடம் பிறவி இருதய குறைபாடுகளை கண்டறிய 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையங்களுக்கு 55 மென்பொருள் பொருத்திய நவீன பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவிகள் வழங்கப்படும் மற்றும் பிறந்த குழந்தைகளின் வளர்சிதைமாற்ற நோய்களை கண்டறியும் திட்டம் காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 40 லட்சம் ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும்.

* பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, வால்பாறை, பெரியநாயக்கன்பாளையம், குறிஞ்சிப்பாடி, சேனன்விளை, கறம்பக்குடி, சுப்பிரமணியபுரம், அய்யம்பேட்டை, போடிநாயக்கனூர், துவரங்குறிச்சி, சேரன்மாதேவி, கூடங்குளம், ஆயகுடி, வளவனூர் மற்றும் மரக்காணம் ஆகிய 15 அரசு மருத்துவமனைகளுக்கு பல் சிகிச்சைக்கான கருவிகள் 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* தேசிய மருத்துவ உத்தரவாத தர திட்டம், காயகல்ப் தூய்மைக்கான விருது திட்டம் மற்றும் லக்ஷ்யா விருது வழங்கும் திட்டங்களில் அரசு மருத்துவமனைகள் பங்கேற்கும் பணியினை மேற்கொள்ள 31 தர மேலாளர்கள் 37 லட்சம் ரூபாய் செலவில் பணியமர்த்தப்படுவார்கள்.

நடமாடும் சித்தா மருத்துவக்குழு

* இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களின் நலன் காக்க 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மகப்பேறு வகைப்பாடு அமைப்பு 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுவதோடு, பிரசவத்திற்குப் பின் இரத்தக் கசிவு காரணமாக ஏற்படும் இறப்புகளைத் தடுக்க சென்னை அரசு கஸ்தூரிபா காந்தி மகளிர் மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை மற்றும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைகளுக்கு 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் Thrombo elastrograph கருவிகளும் வழங்கப்படும். மேலும், மகளிர் நலன் காக்க கர்ப்பப்பைவாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய, அனைத்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கையடக்க தெர்மோகோயாகுலேட்டர் கருவிகள் வழங்கப்படும்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணம் ஆகிய வட்டாரங்களில் உள்ள மலைவாழ் பகுதி மக்களின் நலனுக்காக 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடமாடும் சித்தா மருத்துவக் குழு அமைக்கப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள 54,439 அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு 32 லட்சம் ரூபாய் செலவில் சிறப்பு உணவுப் பாதுகாப்புப் பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

* உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு, பால், எண்ணெய், மாமிசம், குடி தண்ணீர், இதர உணவுப் பொருட்களில், ஆய்வு செய்யும் இடத்திலேயே கலப்படத்தை கண்டறிய, ‘விரைவுப் பகுப்பாய்வுப் பெட்டகம்’ 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள காது கேளாதோர்களுக்கான வால் நரம்பு உள்வைப்பு மையத்திற்கு நவீன நுண்ணோக்கி கருவி 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கி வலுப்படுத்தப்படும்.

* சேலம் மாவட்டம், மேட்டூர் அணை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் காது மூக்கு தொண்டை புறநோயாளிகள் பிரிவு 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

* 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு 17.6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் கலப்பான் வழங்கப்படும்.

சென்னை எழும்பூர் மகளிர் மருத்துவமனையில், இருதயக் கோளாறு உள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் கர்ப்பத்தை கண்காணித்து சிகிச்சை அளித்திட இருதய நோய்க்கான பதிவேடு 25 லட்சம் ரூபாய் செலவிலும், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்தவமனையில் ஹீமோகுளோபினோபதி மற்றும் ஹீமோபிலியா பாதிப்பு உள்ள குழந்தைகளின் விவரங்கள் அடங்கிய பதிவேடு 10 இலட்சம் ரூபாய் செலவிலும் பராமரிக்கப்படும். ஒருங்கிணைந்த புற்றுநோய் பதிவுக்காக இணையதள அறிவிக்கை அமைப்பு 17 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

* உணவுக் கலப்படத்தைக் கண்டறிய அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், துணை சுகாதார நிலையங்களிலும், டி.ஏ.ஆர்.டி. திட்டத்தின் கீழ் விரைவுப் பரிசோதனைகள், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* அரசு மற்றும் தனியார் மருத்துவ அலுவலர்கள் வழங்கும் இறப்பு சான்றிதழில் இறப்புக்கான சரியான காரணத்தை குறிப்பிட, மென்பொருள் பயன்படுத்த உரிய பயிற்சி அளிக்கப்படும்.

* பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கப்படும் சுகாதார சான்றுகள் எளிமைப்படுத்தப்பட்டு, இணையதளம் மூலமாக வழங்கப்படும்.

* முறைசாரா அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மீனவ சமுதாய மக்களுக்கு ஏற்படும் மன அழுத்ததிற்கு சிகிச்சை அளிக்க, சென்னை மன நல காப்பகத்தில் தொழில் சார்ந்த மன நல புறநோயாளி பிரிவு ஏற்படுத்தப்படும்.

* தமிழ்நாட்டில் பாலின மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வழிமுறைகள் வெளியிடப்படும். இவர்களின் சுகாதாரத் தேவைகள், தேசிய சிறார் நலத் திட்டம் மற்றும் தேசிய வளரிளம் பருவத்தினர் பாதுகாப்புத் திட்டத்துடன் இணைக்கப்படும்.

* இந்திய மருத்துவ ஆய்வுக் கழக உதவியுடன் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பணிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தொடங்கப்படும்.

* இந்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின்படி, உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கு, ‘சுகாதார மதிப்பீடு’ திட்டத்தின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இணையதளம் வழியாக தயாரிப்பு உரிமங்கள்

* அலோபதி மற்றும் ஹோமியோபதி மருந்துகள் தயாரிப்பு உரிமங்கள் இணையதளம் வாயிலாக வழங்கப்படும்.

* தன்னார்வ குருதி கொடையாளிகளை அதிகரிக்கும் வகையில், மாநில அளவிலான தன்னார்வ குருதி கொடையாளிகள் பதிவேடு பராமரிக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் இரத்த வகை அடையாள அட்டை வழங்கப்படும்.

* கிராமப் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழு வாகனங்கள் மற்றும் பள்ளி சிறார் நலத் திட்டத்தில் செயல்படும் நடமாடும் மருத்துவக் குழு வாகனங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டை மேலாண்மை செய்ய, ஒரு மைய கண்காணிப்புப் பிரிவு தமிழ்நாடு மாநில சுகாதார போக்குவரத்து இயக்குனரகத்தில் நிறுவப்படும்.

செவிலிய மாணவர்களின் சீருடைகள் மாற்றி அமைப்பு

* தற்போதைய கால சூழலுக்கு ஏற்றவாறு அண்மையில் செவிலியர்க்கான சீருடையை மாற்றி அமைத்துள்ள இந்த அரசின் நடவடிக்கை செவிலியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது செவிலிய மாணவ மாணவியர்களுக்கான சீருடையும் மாற்றி அமைக்கப்படும்.

* அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், அவசர சிகிச்சை, லேப்பராஸ்கோப்பி, எண்டோஸ்கோப்பி போன்ற சிகிச்சை முறைகளிலும் மருத்துவமனை மேலாண்மை முறைகளிலும், தொடர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடங்கப்படும்.

பணியாளர்கள் தொகுப்பு நிதி உருவாக்கம்

* இரவும் பகலும் பணிபுரிவதால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்தோடு, மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணிபுரியும் பல்வேறு பணியாளர்களுக்கு மன அழுத்தக் குறைப்புப் பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் பணியாளர்களின் பணிச் சூழலை மேம்படுத்தி, அவர்களின் செயல்திறன் மேலும் உயர வழிவகுக்கும் வகையில், மருத்துவமனைகளின் அலுவல் இடங்கள் செம்மைப்படுத்தப்படும்.

* மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அவரவர் விருப்பப் பங்களிப்பில் ஒரு தொகுப்பு நிதி உருவாக்கப்பட்டு, பணியாளர்கள் பணிக்காலத்தில் எதிர்பாராத வகையில் உயிரிழந்தால், இத்தொகுப்பு நிதியிலிருந்து அவர்கள் குடும்பத்திற்கு அவரவர் பங்களிப்பின் அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *