தமிழகத்தில் ரூ.2,780 கோடி முதலீடு – 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த மாதம் 28-ந் தேதி அவர் தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டன் நகரத்துக்கு சென்றார்.

அங்கு தொழில் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.

உலகப் புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாயின.

அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிசாமி, லண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு 1-ந் தேதியன்று புறப்பட்டு சென்றார்.

அந்த நாட்டின் பபல்லோ நகரத்துக்கு சென்று அங்குள்ள மாட்டுப்பண்ணையை அவர் பார்வையிட்டார்.

இந்த நிலையில், 3-ந் தேதியன்று அவர் நியூயார்க் நகரத்துக்கு சென்றார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து பேசும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அந்த முதலீட்டாளர்கள் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்றார். இந்த கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான அம்சங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி, இங்கு தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் 

முதலீடு செய்துள்ள அமெரிக்க நிறுவனங்களான கேட்டர்பில்லர், போர்டு போன்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நல்ல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் பிராங்க் விஸ்னரும் தமிழ்நாட்டில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதைத் தொடர்ந்து, தொழில் முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற ஒரு காட்சித்தொகுப்பு திரையிடப்பட்டது.

வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், நிதி சார்ந்த தொழில்நுட்ப முதலீடுகளுக்கும், வாகன உற்பத்தித் தொழில்நுட்பத்தின் அடுத்த நிலையைப் பயன்படுத்த வாய்ப்புள்ள வானூர்தி, விண்கல தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் உகந்த மாநிலம் தமிழ்நாடு என வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் முதலீட்டுக்கு உகந்த சூழல் உள்ளது என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும், முதலீடுகளுக்கு அரசு அளித்து வரும் ஊக்க உதவிகளையும், தடையற்ற மின்சாரம் வழங்கி வருவதையும், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளும், திறன்மிக்க மனித வளமும் தமிழ்நாட்டில் உள்ளதையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துக்கூறினார். அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தின் இறுதியில் ஜீன் மார்ட்டின், அக்குய்ல் சிஸ்டம்ஸ், சீடஸ் பர்மா, நியூரே கெமிக்கல்ஸ், நோவிட்டியம் லாப்ஸ், ஜோஹோ ஹெல்த், எஸ்.டி. எல்.ஜி.என்., சரம்-4, எமர்சன், ஆஸ்பைர் கன்சல்ட்டிங், ரிவேச்சர்-எல்.எல்.சி., ஜில்லியோன் டெக்னாலஜீஸ் உள்ளிட்ட 16 நிறுவனங்கள், தமிழ்நாட்டில் ரூ.2,780 கோடி முதலீடு செய்து, தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

இதைத் தவிர ஹால்டியா பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம், நாப்தா கிராக்கெர் யூனிட்டுடன் கூடிய உற்பத்தி தொழிற்சாலையை முதற்கட்டமாக சுமார் ரூ.50 ஆயிரம் கோடியில் அமைக்க விருப்பம் தெரிவித்து, கொள்கை அளவிலான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க, மெலிசா கெஸ்லர், மார்க் ஜான்சன், கே அண்டு லிங்காயின், வாரன் நாப், மனீஷ் பண்டாரி போன்ற தொழில் பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக ஆலோசனை நடத்தினார்.

நியூயார்க்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்து, தமிழ்நாட்டிற்கு வரும் தொழில் முதலீட்டாளர்களுக்கு அனைத்து வகையான ஆக்கமும், ஊக்கமும் தமிழக அரசு அளிக்கும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.

மேலும், தொழில் வளத்தைத் தவிர, விவசாயம் சார்ந்த தொழில்களை, குறிப்பாக, விவசாயிகளின் வருமானத்தை, கால்நடை மற்றும் பால்வள தொழில்களை தமிழக அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் ரூ.2,780 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில், இதன்மூலம் தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.

இந்த தகவல்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *